வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட 43% குறைவாக பதிவு
இந்தாண்டு வழக்கத்தினை விட வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, 'அக்டோபர் மாதத்தின் வடகிழக்கு பருவமழை இயல்பாக 171 மி.மீ.,பதிவாகியிருக்க வேண்டும். இந்தாண்டு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இம்மாதத்தின் மழை பதிவானது 98 மி.மீ.,ஆக இருக்கும்', 'ஆனால் இம்முறை வழக்கத்தினை விட 43%க்கும் குறைவாகவே வடகிழக்கு பருவமழை பதிவாகியுள்ளது' என்று கூறியுள்ளார். மேலும், "வடகிழக்கு பருவமழையின் பதிவு கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பினை விட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பினை விட குறைவாகவும், 6 மாவட்டங்களில் இயல்பான அளவிலான மழைப்பதிவும், 17 மாவட்டங்களில் வழக்கத்தினை விட மிக குறைவாகவும் பெய்துள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்
அதனை தொடர்ந்து, கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே போல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல், திருப்பத்தூர், திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.