வடகிழக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை: வானிலை ஆய்வு மையம்
இந்த மாதம், வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவுகள் காட்டுகின்றன. வரலாற்றிலேயே இல்லாத அளவு வடகிழக்கு மாநிலங்களின் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யும் வடகிழக்கு மாநிலங்களில் அதிக வெப்பநிலை இருப்பது அசாதாரணமான ஒரு விஷயமாகும். இந்த ஆண்டு இடியுடன் கூடிய மழை பெய்வது அங்கு முற்றிலுமாக குறைந்துள்ளது. திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் ஏப்ரல்-15 முதல் 19ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இதற்கு முன் அகர்தலாவில் ஏப்ரல் 30, 1960அன்று அதிபட்ச வெப்பநிலை 41.5 டிகிரி செல்சியஸாக பதிவு செய்யப்பட்டது.
வடகிழக்கு இந்தியாவில் பதிவான வெப்பநிலைகள்
மேகாலயாவின் ஷில்லாங்கில் அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் முதல் 29.1 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இதற்கு முன் ஷில்லாங்கில் ஏப்ரல் 5, 1973அன்று அதிபட்ச வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸாக பதிவு செய்யப்பட்டது. மணிப்பூரில் உள்ள இம்பாலில் அதிகபட்ச வெப்பநிலை 32.8 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இம்பாலில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே அதிகபட்ச வெப்பநிலை(36.1 டிகிரி செல்சியஸ்) ஏப்ரல் 9, 1999 இல் பதிவாகி இருக்கிறது. ஏப்ரல்-15 முதல் 19 வரை கொல்கத்தாவின் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 41.6 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. கொல்கத்தாவின் அதிகபட்ச வெப்பநிலை ஏப்ரல் 25, 1954அன்று 42.8 டிகிரி செல்சியஸாக பதிவுசெய்யப்பட்டது.