தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் செய்தி போலியானது - காவல்துறை விளக்கம்
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேடி வந்து தற்போது அதிகளவில் பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து விட்டதாக சில காலமாக ஒரு பேச்சு வலம் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வடமாநில ஊழியர்களை தமிழர்கள் தாக்குவது போன்ற சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து அண்மையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கவலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளுடன் பீகார் அதிகாரிகளை தொடர்பு கொள்ள செய்து, தென்மாநிலத்தில் வாழ்வாதாரத்தை தேடிவரும் பீகாரை சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது குறித்து அறிவுறுத்தல்களை வழங்கியதாக தனது ட்விட்டர்பக்கத்தில் பதிவும் செய்திருந்தார். இந்நிலையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய வீடியோக்களை தமிழக காவல்துறை ஆய்வு செய்துள்ளனர்.
வீடியோக்களை பரப்ப வேண்டாம் - தமிழக காவல்துறை
ஆய்வு நடத்தியதன் பேரில் அந்த வீடியோக்கள் போலியான பதிவு என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழக காவல்துறை சார்பில் இந்தியில் ட்விட்டர் பதிவு ஒன்று போடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் வட இந்தியர்கள் மற்றும் இந்தி பேசும் மக்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வின் உண்மை தன்மை சரிபார்க்கப்படாமல் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க வதந்தி ஆகும். தயவு செய்து இதுபோன்ற வீடியோக்களை நம்பி பரப்ப வேண்டாம். ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பும் உறுதி செய்யும் வகையில் சட்டம் ஒழுங்கை திறம்பட செயல்படுத்தப்பட்டு மிகவும் அமைதியான, பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.