மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், கர்நாடக அரசு தன்னிச்சையாகக் காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் இந்தத் தனித்தீர்மானத்தை இன்று முறைப்படி முன்மொழிந்து உரையாற்றினார். தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானம், எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கர்நாடக அரசு
சட்டப் போராட்டங்களையும் தீர்ப்புகளையும் மதிக்காத கர்நாடக அரசு
சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய், காவிரி நடுவர் மன்றம் 2007 பிப்ரவரி 5 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 2018 பிப்ரவரி 16 அன்று வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் எவ்வித இசைவையும் பெறாமலும், மத்திய அரசின் முறையான அனுமதிகளைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், இப்பேரவை தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு
புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தல்
காவிரி நடுவர் மன்றமும் உச்ச நீதிமன்றமும் காவிரிப் படுகையை ஒரு பற்றாக்குறை படுகை என்றே தங்களின் தீர்ப்புகளில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன. படுகையின் மொத்த நீரும் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டுவிட்ட சூழலில், காவிரிப் படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ அல்லது கூடுதலாக நீரைப் பயன்படுத்தவோ சட்டப்படி இயலாது. எனவே, கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்குத் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது என இந்தத் தீர்மானத்தின் மூலம் தமிழ்நாடு அரசு மிக உறுதியாக வலியுறுத்தியுள்ளது.
தமிழக விவசாயிகள்
தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாக்க ஒருமனதான ஆதரவு
காவிரிப் பிரச்சினை என்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையேயான மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயமாகும். பிற படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கக் கூடாது எனத் தீர்மானத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கர்நாடகாவின் இந்த சட்டவிரோத முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகளின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்திட அரசு எடுக்கும் அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் ஒட்டுமொத்தப் பேரவையும் தங்களின் ஆதரவை ஒருமனதாகத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN || மேகதாது அணைக்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேறியது | #Udhayanidhistalin | #DMK | #PMK | #SowmiyaAnbumani | #VCK | #TNAssembly | #Governor | #CMVijay | #PolimerNews pic.twitter.com/fkbr8moqjW
— Polimer News (@polimernews) June 19, 2026