அருணாச்சல் விவகாரம்: 'ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது': அமித்ஷா
எல்லையில் இந்தியப் படைகள் இருப்பதால், நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(ஏப் 10) தெரிவித்தார். நம் நிலத்தில் யார் வேண்டுமானாலும் அத்துமீறி நுழையும் காலம் முடிந்துவிட்டது என்றும் அவர் கூறினார். "இன்று, ITBP மற்றும் இந்திய இராணுவம் அங்கு இருப்பதால், நம் நிலத்தில் ஒரு அங்குலத்தை கூட யாரும் எடுக்க முடியாது" என்று அவர் கூறியுள்ளார். அருணாச்சல பிரதேசத்திற்கு அமித்ஷா செல்வது பற்றி சீனா பேசியதை அடுத்து, அமித்ஷா இதை தெரிவித்திருக்கிறார். உள்துறை அமைச்சர் இரண்டு நாள் பயணமாக அருணாச்சலுக்கு சென்றுள்ளார். அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கிராமமான கிபித்தூவில் 'வைப்ரன்ட் கிராமங்கள் திட்டத்தை' அவர் தொடங்கி வைத்தார்.
அமித்ஷா அருணாச்சலுக்கு செல்வது எல்லையில் நிலவும் அமைதிக்கு உகந்தது அல்ல: சீனா
அருணாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களின் வடக்கு எல்லையை ஒட்டிய 19 மாவட்டங்களில் உள்ள 2967 கிராமங்கள் இந்த வளர்ச்சி திட்டத்திற்காக தேர்தெடுக்கப்பட்டுள்ளன. அங்கு பேசிய அமித்ஷா, ITBP வீரர்களும் ராணுவமும் எல்லையில் இரவு பகலாக உழைப்பதால் தான் இன்று நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் நிம்மதியாக தூங்க முடிகிறது என்று கூறினார். "ஜாங்னானுக்கு(அருணாச்சலுக்கு சீனா வைத்திருக்கும் பெயர்) இந்திய அதிகாரி பயணம் செய்வது சீனாவின் ராஜ்ய இறையாண்மையை மீறுவதாகும். இது எல்லையில் நிலவும் அமைதிக்கு உகந்தது அல்ல." என்று அமித்ஷாவின் அருணாச்சல் பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அமித்ஷா இப்படி பேசி இருக்கிறார்.