அமித்ஷா அருணாச்சல பிரதேசம் செல்ல கூடாது: சீனா எதிர்ப்பு
செய்தி முன்னோட்டம்
உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்வதை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்திற்கு அமித்ஷா செல்வது பெய்ஜிங்கின் ராஜ்ய இறையாண்மையை மீறுவதற்கு சமம் என்று சீன வெளியுறவுதுறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இன்று(ஏப் 10) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த வாரம், அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த சில பகுதிகளுக்கு சீனா "மறுபெயரிட்டது".
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், "ஜாங்னான் சீனாவின் பகுதி" என்று கூறியுள்ளார்.
ஜாங்னான் என்பது சீனா, அருணாச்சலுக்கு வைத்திருக்கும் பெயராகும்.
"ஜாங்னானுக்கு இந்திய அதிகாரி பயணம் செய்வது சீனாவின் ராஜ்ய இறையாண்மையை மீறுவதாகும். இது எல்லையில் நிலவும் அமைதிக்கு உகந்தது அல்ல." என்று அவர் தெரிவித்துள்ளார்.
details
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பிரிக்க முடியாத பகுதி
ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் அருணாச்சலப் பிரதேசத்திற்குச் செல்லும் அமித்ஷா, இந்திய-சீன எல்லையில் உள்ள கிபித்தூ என்ற கிராமத்தில் 'வைப்ரன்ட் கிராமங்கள் திட்டத்தை' தொடங்கி வைக்கிறார்.
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பிரிக்க முடியாத பகுதி என்றும், புதிதாக பெயர்கள் வைப்பது இந்த யதார்த்தத்தை மாற்றாது என்றும் இந்தியா தனது நிலைப்பாட்டை கூறி வருகிறது.
"இத்தகைய அறிக்கைகளை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சீனா இப்படிப்பட்ட முயற்சியை மேற்கொள்வது இது முதல் முறையல்ல. இதை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது. புதிதாக பெயர்கள் வைப்பது இந்த யதார்த்தத்தை மாற்றாது." என்று 'பெயர் மாற்றப்பட்டதற்கு' இந்தியா பதிலத்திருந்தது.