புதுச்சேரியில் H1N1 பன்றிக்காய்ச்சல் அதிகரிப்பு: அச்சம் வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ஃப்ளுயன்சா பரவி வருவது தொடர்பாகப் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், அதேநேரத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் புதுச்சேரிசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது பரவி வரும் H1N1 இன்ஃப்ளுயன்சா வைரஸில் புதிய மரபணு மாற்றங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், பெரும்பாலான பாதிப்புகள் லேசான தன்மையிலேயே இருப்பதால், பொதுமக்கள் இது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், நோய் அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எச்சரிக்கை
அறிகுறிகள் மற்றும் கவனிக்க வேண்டியவர்கள்
H1N1 காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் திடீரென தீவிர காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை வலி, உடல் வலி, மிகுந்த சோர்வு, தலைவலி மற்றும் மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்.
குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே பிற உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்; இவர்களுக்கு அறிகுறிகள் தீவிரமடையும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ சிகிச்சையை நாட வேண்டும்.
காய்ச்சல் அல்லது சளி ஏற்பட்டவுடன் பொதுமக்கள் தாங்களாகவே மருந்தகங்களுக்கு சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது எனசுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
ஆண்டிபயாடிக் மருந்துகள் மற்றும் ஒசல்டமிவிர் போன்ற ஆன்டிவைரல் மருந்துகளை மருத்துவரின் முறையான பரிந்துரை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்றும், உடலின் தன்மைக்கேற்ப மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சை
தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மூச்சுத்திணறல், மார்பு வலி, திடீர் மயக்கம், வலிப்பு அல்லது சளியில் ரத்தம் வெளியேறுதல் போன்ற தீவிர அறிகுறிகள் தென்பட்டால் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுக வேண்டும்.
சாதாரண காய்ச்சல் என்று அலட்சியப்படுத்தாமல், உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
H1N1 நோய் பரவலைத் தடுக்க பொதுமக்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் அடிக்கடி கழுவ வேண்டும்.
இருமல் அல்லது தும்மல் ஏற்படும் போது வாய் மற்றும் மூக்குப் பகுதியைத் துணியால் மூடிக்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது என்றும், சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.