மைனர் பெண்ணை பிரிஜ் பூஷன் துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை: காவல்துறை
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்க்கு எதிராக மைனர் பெண் மல்யுத்த வீரர் பதிவு செய்த புகார்களுக்கு "உறுதியான ஆதாரங்கள்" எதுவும் கிடைக்கவில்லை என்று டெல்லி காவல்துறை இன்று(ஜூன் 15) தெரிவித்துள்ளது. அதனால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட FIRரை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான 500 பக்க ரத்து அறிக்கையை டெல்லி போலீஸார் பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். பிரிஜ் பூஷனுக்கு எதிராக ஒரு மைனர் பெண் உட்பட 6 மல்யுத்த வீரர்கள் புகார் அளித்திருந்தனர். இதில் அந்த மைனர் பெண்ணின் FIRரை மட்டும் ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மைனர் பெண் தனது அறிக்கையை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது
பிற FIRகளின் படி, அவர் மீது IPCயின் 354, 354 டி, 345 ஏ பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த சிறுமி, தனது அறிக்கையை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. "நான் மிகவும் கடினமாக உழைத்தேன், ஆனால் என்னை தேர்வு செய்யவில்லை. அந்த கோபத்தில் அவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு செய்தேன்," என்று அந்த மைனர் மல்யுத்த வீரர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மைனர் பெண்ணின் FIRரை ரத்து செய்ய கோரி 500 பக்க ரத்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பிற பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக 1,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.