பிப்ரவரி 14, மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம் இல்லை: மத்திய அரசு
காதலர் தினத்தை மக்கள், பசு மாட்டை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அமைப்பு தானாக முன்வந்து அதை வாபஸ் பெற்றுள்ளது. இந்திய விலங்குகள் நல வாரியம்(AWBI) பிப்ரவரி 14ஆம் தேதியை பசு மாட்டை கட்டிப்பிடிக்கும் தினமாக பெயரிட்டு ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து, பிப்ரவரி 14ஆம் தேதி அன்று மக்கள் பசு மாடுகளை கட்டி அணைத்து தங்கள் அன்பைப் பகிர வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கையும் விடுத்து இருந்தது. மேலும், அப்படி செய்தால் "உணர்ச்சிச் செழுமை" ஏற்படும் என்றும் "தனிமனிதன் மற்றும் சமூகத்திற்கு மகிழ்ச்சி" கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தது. விலங்குகள் நல வாரியம், பாஜகவின் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையிலான கால்நடை பராமரிப்பு அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
மேற்கத்திய நாடுகளில் இருந்து பெறப்பட்ட காதலர் தினம்
"மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, பிப்ரவரி 14 அன்று மாட்டை கட்டிப்பிடிக்கும் தினமாக அனுசரிக்கப்பட இருந்தது திரும்பப் பெறப்படுகிறது." என்று AWBI கூறியுள்ளது. காதலர் தினம் மேற்கத்திய நாடுகளில் இருந்து பெறப்பட்ட நம் கலாச்சாரத்திற்கு எதிரான ஒரு தினமாக சில அமைப்புகளால் பார்க்கப்படுகிறது என்கின்றனர் விமர்சகர்கள். இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில், காதலர் தினத்தன்று, சில குழுக்களால் காதலர்கள் தாக்கப்படுவது மிகவும் சாதாரணமான விஷயமாகிவிட்டது. "காலப்போக்கில் மேற்கத்திய கலாச்சாரத்தினால் வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ளன. மேற்கத்திய நாகரீகத்தால் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டது." என்று விலங்குகள் நல வாரியம் அந்த அறிக்கையில் கூறி இருந்தது. இந்த அறிவிப்பு, சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.