நெய்வேலி NLC -இன் கூலிங் டவர் இடிக்கும் பணி தொடங்கியது; என்ன காரணம்?
நெய்வேலி NLC நிறுவனத்தின் முதல் அனல் மின்நிலையம் (Cooling Tower) இடிக்கும் பணி தற்போது தொடங்கியது. கடலூர் மாவட்டம், நெய்வேலியில் 1962-ஆம் ஆண்டு முதல் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையம் செயல்பட்டு வந்தது. இதன் மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த முதல் அனல் நிலையத்தை இடிக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. இடிக்கப்படும் இந்த அனல்மின் நிலையத்திற்கு ஆயுட்காலம் 22 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சில வருடங்களுக்கு முன்னர், அந்தக் கட்டமைப்பை புதுப்பித்து மீண்டும் செயல்படுத்தப்பட்டது என உத்தரவிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மூடப்பட்ட மின் நிலையம் தற்போது இடிக்கப்படுகிறது.
அனல் மின் நிலையத்தை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
உலகளவில், ஒரு அனல்மின் நிலையம் 20 ஆண்டுகளுக்கு மேல் இயங்கக்கூடாது என்கின்ற வரையறை உள்ளது. இந்த தருணத்தில், மத்திய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில், என்.எல்.சி. முதல் அனல்மின்நிலையத்தை மூடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. எனினும் மூடப்படும் அனல்மின்நிலையத்தின் மின் உற்பத்தி குறைபாடை ஈடு செய்ய புதிய அனல்மின் நிலையம் செயல்படத்துவங்கியது. இந்த அனல்மின் நிலையம் ஜெர்மன் மற்றும் ரஷ்யா தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது. தற்போது அனல்மின் நிலையம் இடிக்கப்படுவதால், அந்த பகுதியில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.