
தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் நிர்மலா சீதாராமன்
செய்தி முன்னோட்டம்
கடந்த 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டியது.
குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கடும் சேதமடைந்தது.
இதனையடுத்து வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசி மூலம் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டறிந்ததோடு, வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, நேற்று(டிச.,25) இரவு நிர்மலா சீதாராமன் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
பின்னர் இன்று(டிச.,26) காலை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
பாதிப்புகள்
வெள்ளம் அதிகம் பாதித்த ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தார்
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி எம்.பி.கனிமொழி மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வெள்ளப்பாதிப்பால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், அதற்கு எடுக்கப்பட்டுள்ள நிவாரண பணிகள் குறித்தும், எடுக்கவேண்டிய நிவாரண பணிகள் என்னென்ன என்பதன் விவரங்களும் நிர்மலா சீதாராமனுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அதன் பின்னர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்ற நிர்மலா சீதாராமன் மற்றும் எல்.முருகன் ஆய்வினை மேற்கொண்டனர் என்று தெரிகிறது.
மேலும், திருச்செந்தூர் நெடுஞ்சாலை வழியே காரில் சென்று வெள்ளம் அதிகம் பாதித்த ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளையும் அவர் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.