தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு
சென்னை மாவட்டத்தினை தவிர, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 25 மாவட்டங்களுக்கு முன்னதாகவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகளை தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் நியமனம் செய்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து, வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிக்க இந்த சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நாகை, கோவை, ராமநாதபுரம், சேலம், திருப்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
திட்ட பணிகளை நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளல்
தலைமை செயலாளரால் நியமனம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய கண்காணிப்பு அதிகாரிகள் டிட்கோ நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை, சுகாதார திட்டம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, நெடுஞ்சாலை துறை போன்ற தமிழகத்தின் பல்வேறு திட்டங்களின் வளர்ச்சி பணிகளை கண்காணித்து மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. தமிழக அரசின் திட்டங்கள் யாவும் முறையாக செயல்படுகிறதா, எவ்வாறு செயல்படுகிறது? என்பதனையும் கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் நடக்கும் திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அதற்கான அறிக்கையினை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.