சென்னை ஐஐடி-யில் துவங்கியுள்ள இளநிலை பட்டப்படிப்பு - சென்னை ஆட்சியரின் செய்திக்குறிப்பு
சென்னை ஐஐடி-யில் முதன்முறையாக துவங்கப்பட்டுள்ள இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்து பயில எஸ்.சி., மற்றும் எஸ்.டி. மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர், சென்னை ஐஐடி-யில் முதன்முறையாக மின்னணு அமைப்புகள் மற்றும் இளநிலை தரவு அறிவியல் என்னும் பட்டப்படிப்புகள், அதாவது டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ், பிஎஸ்சி.,உள்ளிட்டவை துவங்கப்பட்டுள்ளது. இந்த பட்டப்படிப்பிற்கு பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பினை முடித்த தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.
சென்னை ஐஐடி., மற்றும் தாட்கோ அளிக்கும் 4 வார பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்
மேலும், இதற்கான விண்ணப்பங்களை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த படிப்பில் சேர எஸ்.சி., மற்றும் எஸ்.டி. மாணவர்கள் ஐஐடி நடத்தும் நுழைவு தேர்வினை மாணவ-மாணவிகள் எதிர்கொள்ள தேவையில்லை. அதற்கு பதில், பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான படிப்பினை முடித்த மாணவர்களுக்கு சென்னை ஐஐடி., மற்றும் தாட்கோ அளிக்கும் 4 வார பயிற்சியினை மேற்கொண்டு, அதன் முடிவில் நடக்கும் தகுதி தேர்வினை எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த இளநிலை பட்டப்படிப்பு கடந்த மார்ச் மாதம் சென்னை ஐஐடி-யில் அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய கல்வித்துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் இதனை காணொளி மூலம் துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.