LOADING...
ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல்
இந்த மனு மீதான வாதங்களை சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல்

எழுதியவர் Sindhuja SM
Apr 05, 2023
06:43 pm

செய்தி முன்னோட்டம்

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணையின் "முக்கியமான" கட்டத்தில் இருப்பதாகவும், அவர் அந்த ஊழலில் உடந்தையாக இருந்ததற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அமலாக்க இயக்குநரகம் இன்று(ஏப் 5) டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஜாமீன் மனு ஒன்றை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த அமலாக்க இயக்குநரகம், சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த மனு மீதான வாதங்களை சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்தியா

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது

சிசோடியாவின் காவலை நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்க இயக்குநரகம் கேட்டுக்கொண்டதை அடுத்து, அவரது நீதிமன்ற காவல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ​​"வெளிச்சத்திற்கு வந்துள்ள புதிய ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ED ஈடுபட்டுள்ளது. எங்களுக்கு கால அவகாசம் தேவை... வாதங்களை முன்வைக்க கால அவகாசம் வழங்க நீதிமன்றத்தை கோருகிறோம்," என்று அமலாக்க இயக்குனரகத்தின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார். இதற்கிடையில், மணீஷ் சிசோடியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர் பணமோசடி செய்த குற்றச்சாட்டை நிரூபிக்க EDயிடம் எந்த ஆதாரம் இல்லை என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.