நீட்-யுஜி 2026 மறுதேர்வு: Telegram தடைக்கு இடைக்கால தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
செய்தி முன்னோட்டம்
ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட்-யுஜி 2026 (NEET-UG 2026) மறுதேர்வை ஒட்டி, முறைகேடுகளைத் தடுப்பதற்காக டெலிகிராம் செயலியைத் தற்காலிகமாக முடக்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மத்திய அரசின் இந்த தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் தாக்கல் செய்த அவசர மனுவை, டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, விரிவான பதிலை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இன்று மதியத்திற்கு ஒத்திவைத்தது.
வாதம்
டெலிகிராம் தரப்பு வாதம்: "15 கோடி பயனாளர்கள் பாதிப்பு"
டெலிகிராம் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முன்வைத்த வாதங்கள்: இந்தியாவில் டெலிகிராம் செயலியை சுமார் 15 கோடி பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக செயலியை முடக்குவது என்பது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14-இன் (சமத்துவ உரிமை) கீழ் அப்பட்டமான விதிமீறலாகும். தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளன. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக அரசு சுட்டிக்காட்டிய மற்றும் சந்தேகத்திற்குரிய 900-க்கும் மேற்பட்ட குழுக்கள் மற்றும் இணைப்புகளை டெலிகிராம் நிறுவனம் உடனடியாக நீக்கியுள்ளது. தவறு செய்யும் ஒரு சில நபர்களுக்காக ஒட்டுமொத்த தளத்தையும் முடக்குவது முறையல்ல.
எதிர்வாதம்
மத்திய அரசு வாதம்: "அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள் உள்ளன"
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா டெலிகிராமின் மனுவை வன்மையாக எதிர்த்தார். "இது ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த மே மாதத்தில் இருந்தே டெலிகிராம் நிறுவனத்துடன் தொடர்ந்து பேசி வருகிறோம். தங்களின் பாதுகாப்பு ஓட்டைகளைச் சரிசெய்யுமாறு பலமுறை எச்சரித்தும் அவர்கள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை". "இதன் விளைவாகவே தேர்வுப் பொருட்கள் மற்றும் போலி வினாத்தாள்கள் இந்தத் தளத்தின் வழியாகத் திட்டமிட்டுக் கசியவிடப்பட்டுள்ளன. அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி ஏன் இந்தத் தடை விதிக்கப்பட்டது என்பதற்கான காரணங்களையும், இது தொடர்பான பல அதிர்ச்சியூட்டும் உண்மைத் தரவுகளையும் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்வோம்" என்றார்.