"மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்தும் ராகுல் காந்தி": பிரதமர் இல்ல முற்றுகைப் போராட்டத்திற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் CJP நடத்திய பேரணியின் போது மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்தும், நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின. இந்தச் சம்பவத்திற்கு முதன்முறையாக பதிலளித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும், மாணவர்களை தங்களது அரசியல் லாபத்திற்காக பகடை காய்களாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
LoP Shri @RahulGandhi and @INCIndia continue to shamelessly exploit students as political tools to manufacture disruption during the Monsoon Session of Parliament.
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 21, 2026
Shri @RahulGandhi and @INCIndia chose to stage a dharna outside the Hon'ble Prime Minister's residence , causing…
பதிவு
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு
இது குறித்து X தளத்தில், தர்மேந்திரா பிரதான், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நீட் பிரச்சனை குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக தெரிவித்த பிறகும், மாணவர்களின் கவலைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கவே முயற்சிக்கிறது என்றார்.
"காங்கிரஸின் நோக்கம் மாணவர்களுக்கான தீர்வு அல்ல; செய்திகளில் இடம்பெறுவதற்காக அரசியல் நாடகங்களை நடத்துவதுதான்" என்று குற்றம் சாட்டினார்.
"இந்திய மாணவர்கள் அரசியல் பிரச்சாரங்களுக்கான பொருள்களாக பயன்படுத்தப்படுவதை விட மேலான தகுதி படைத்தவர்கள். அவர்களுக்கு குழப்பத்திற்கு பதிலாக தெளிவும், கோஷங்களுக்கு பதிலாக தீர்வும் தேவை. தேர்வு முறையைச் சீரமைக்கவும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது" என்றார்.
முற்றுகை
பிரதமர் இல்ல முற்றுகை போராட்டம்
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே நேற்று காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டத்திற்கு மத்திய அரசு வட்டாரங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அரசியல் தலைவர்களின் அதிகாரப்பூர்வ இல்லங்களை நோக்கிப் பேரணி நடத்துவது முதிர்ச்சியடைந்த ஜனநாயகத்திற்கு அழகல்ல என்றும், இது நாட்டின் தலைவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் தவறான முன்னுதாரணமாகவும் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளில் சமீபத்தில் தலைவர்களின் இல்லங்களை சுற்றி நடைபெற்ற வன்முறைகளைச் சுட்டிக்காட்டிய அதிகாரிகள், இத்தகைய போராட்டங்கள் ஆபத்தானவை என எச்சரித்தனர்.
விடுவிப்பு
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் விடுவிப்பு
முன்னதாக 7 லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தை நோக்கிப் பேரணியாக சென்று வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட பல தலைவர்களை டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, சில மணிநேரங்களுக்கு பின் விடுவித்தனர்.
விடுதலைக்கு பின் பேசிய பிரியங்கா காந்தி, "நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைப் பேச அனுமதிப்பதில்லை; போராட்டம் நடத்த அனுமதி கேட்டாலும் தருவதில்லை. அதனால் தான் அவர்கள் எதிர்பார்க்காத இடத்திற்கே சென்று போராட்டம் நடத்தினோம்" எனத் தெரிவித்தார்.