LOADING...
நீட் தேர்வு அதிர்ச்சி! கோவையில் 19 வயது மாணவி தற்கொலை! இரு நாட்களில் 4 மாணவர்கள் உயிரிழந்த சோகம்!
கோவையில் நீட் தேர்வு மாணவி தற்கொலை

நீட் தேர்வு அதிர்ச்சி! கோவையில் 19 வயது மாணவி தற்கொலை! இரு நாட்களில் 4 மாணவர்கள் உயிரிழந்த சோகம்!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 18, 2026
10:34 am

செய்தி முன்னோட்டம்

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடையே நிலவி வரும் கடுமையான மனஅழுத்தம் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற குளறுபடிகளால், நாடு முழுவதும் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் 19 வயதுடைய நீட் தேர்வு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நீட் மறுதேர்வுக்கான இறுதித் தயாரிப்புகள் மற்றும் கவுன்ட்டவுன் நடந்து வரும் வேளையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட நான்காவது மாணவர் இவராவார்.

மன அழுத்தம்

வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு தந்த கடுமையான மனஅழுத்தம்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவியான அனு கீர்த்தனா, ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். எப்படியாவது மருத்துவக் கனவை நனவாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் தற்பொழுது மூன்றாவது முறையாகத் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார். அண்மையில் நீட் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, தேசிய தேர்வு முகமை மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது. ஏற்கனவே இரண்டு முறை எழுதிய சூழலில், தற்பொழுது மீண்டும் மறுதேர்வை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் அனு கீர்த்தனா கடந்த சில நாட்களாகக் கடுமையான மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

4 மாணவர்கள் உயிரிழப்பு

இரண்டு நாட்களில் 4 மாணவர்கள் உயிரிழப்பு

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் நீட் தேர்வுக்காக தயாராகி வந்த நான்கு இளம் உயிர்கள் பறிபோயுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரைச் சேர்ந்த 18 வயது மாணவி ரேணு மீனா, டேராடூனைச் சேர்ந்த 23 வயது மாணவி ரியா குமாரி தாபா, ராஜஸ்தானின் சீகார் பகுதியைச் சேர்ந்த 22 வயது மாணவர் பிரதீப் மஹிச் ஆகிய மூவரும் கடந்த இரு தினங்களில் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது கோவையில் அனு கீர்த்தனாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றினாலும், அங்கிருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் மீட்கப்படவில்லை என்பதால் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

போராட்டம்

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்

உயிரிழந்த மாணவி அனு கீர்த்தனா, கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் தலைவரான செந்தில் பிரபுவின் மகள் ஆவார். மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. இச்சம்பவத்தை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 100 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் குடும்பத்திற்குத் தகுந்த நீதி மற்றும் உரிய நிவாரணத் தொகையை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், அதுவரை மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் கூறி அவர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

உடலை வாங்க மறுப்பு

அரசு நிவாரணம் அறிவிக்கக் கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறுப்பு

போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உறவினர்கள், கடந்த காலங்களில் நீட் தேர்வு மனஅழுத்தத்தால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு உடனடியாக நிதியுதவியும், ஆறுதல்களையும் வழங்கியதைச் சுட்டிக்காட்டினர். ஆனால், தற்போதைய சம்பவத்தில் அரசாங்கத்தின் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது இழப்பீடோ அறிவிக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளதால், மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement