தமிழக நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் 16 லட்சம் வழக்குகள்; RTI யில் வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழக நீதிமன்றங்களில் தற்போது 16 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு RTI அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதிகள் பற்றாக்குறையினால், வழக்கின் போக்கு காரணமாக ஏற்படும் தாமதம் காரணமாகவும் இந்த தேக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 15 லட்சத்து 96 ஆயிரத்து 614 சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக RTI அறிக்கை தெரிகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 104 சிவில் வழக்குகள் மற்றும் 24 ஆயிரத்து 591 கிரிமினல் வழக்குகள் என 2 லட்சத்து 3 ஆயிரத்து 695 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
காலியான பணியிடங்கள்
தமிழக கீழமை நீதிமன்றங்களில் 7 லட்சத்து 29 ஆயிரத்து 436 சிவில் வழக்குகள் மற்றும் 6 லட்சத்து 63 ஆயிரத்து 483 கிரிமினல் வழக்குகள் என மொத்தம் 13 லட்சத்து 92 ஆயிரத்து 919 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கிரிமினல் வழக்குகளை விட சிவில் வழக்குகள் தமிழ்நாட்டில் அதிகமாக நிலுவையில் உள்ளன. சென்னை ஐகோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள் 75. தற்போது, 62 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மாவட்ட நீதிபதி பணியிடங்கள் 360-ஆக இருக்கின்றன, இதில் 87 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைவில் நிரப்பி, தாமதமின்றி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே முக்கியமானது.