சட்டப்பிரிவு 370, ஜிஎஸ்டி: நாடாளுமன்றத்தின் முக்கிய மசோதாக்களை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி
சட்டப்பிரிவு 370, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளைப் பழைய நாடாளுமன்றக் கட்டிடம் கண்டுள்ளது என்று நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கூறினார். அமர்வுகள் புதிய கட்டிடத்திற்கு மாறினாலும் கூட, பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் முக்கியத்துவம் மாறாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பின்வரும் விஷயங்களையும் பிரதமர் மோடி இன்று பேசினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி குறித்து பிரதமர் பேசியதாவது: "பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் 'ஓட்டுக்குப் பணம்' என்ற ஊழலை இந்த அவை கண்டது. வெறும் நான்கு எம்.பி.க்கள் கொண்ட கட்சி ஆட்சியில் அமர்ந்ததை இந்த நாடாளுமன்றம் பார்த்தது. 100க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கொண்ட கட்சி எதிர்க்கட்சியாக அமர்ந்தது."
'நேரு, வாஜ்பாய், இந்திரா, சாஸ்திரி': முன்னாள் பிரதமர்கள் பற்றி பேசிய பிரதமர் மோடி
இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்(2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல்) உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். "நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. இது கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. ஒருவகையில் இது ஜனநாயகத்தின் தாய் மீது, நமது உயிர் உள்ளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். அந்தச் சம்பவத்தை நாடு ஒருபோதும் மறக்காது" என்று பிரதமர் பேசினார். மேலும், ஜவஹர்லால் நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க உரைகளையும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். முன்னாள் பிரதமர்களின் உரைகள் எப்போதும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் எதிரொலிக்கும் என்று அவர் தெரிவித்தார்.