நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகள் முடக்கம்
நேஷனல் ஹெரால்டு நாளிதழுக்கு எதிரான பணமோசடி வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் நேற்று முடக்கியது. டெல்லி, மும்பை மற்றும் லக்னோவில் உள்ள அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெடின்(AJL) ரூ.661 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் மற்றும் யங் இந்தியாவின்(YI) ரூ. 90.21 கோடி மதிப்பிலான AJL ஈக்விட்டி பங்குகள் ஆகியவை நேற்று முடக்கப்பட்டது. இந்த இரு அமைப்புகளும் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையவைகளாகும். அமலாக்க இயக்குநரகத்தின் இந்த நடவடிக்கை குறித்து பேசி இருக்கும் காங்கிரஸ், இதை "பழிவாங்கும் தந்திரம்" என்று குறிப்பிட்டுள்ளது. 'யங் இந்தியா' மூலம் 'AJL'-ஐ கையகப்படுத்தும் போது, உயர்மட்ட காங்கிரஸ் தலைவர்கள் பணமோசடி செய்ததாக 2013ஆம் ஆண்டு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டினார்.
குற்றத்தின் வருவாயை வைத்திருப்பதால் சொத்துக்கள் பறிமுதல்
இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் புகார் அளித்தபோது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அவரது புகாருக்கு பதிலளித்த நீதிமன்றம், அமலாக்க இயக்குநரகம் இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்று 2014இல் உத்தரவிட்டது. காங்கிரஸுக்குச் சொந்தமான 'யங் இந்தியா' உட்பட ஏழு பிரதிவாதிகளை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்மானித்தது. கிரிமினல் நம்பிக்கை மீறல், ஏமாற்றுதல், நேர்மையற்ற முறையில் சொத்துக்களைப் பயன்படுத்துதல் மற்றும் குற்றவியல் சதி ஆகிய குற்றங்கள் அந்த பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்ட அமலாக்க இயக்குநரகம், குற்றத்தின் வருவாயை வைத்திருப்பதால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் காங்கிரஸுடன் தொடர்புடைய அமைப்புகளின் சொத்துக்களை தற்காலிகமாகப் பறிமுதல் செய்வதாக தெரிவித்துள்ளது.