தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக தனது தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கு சென்று, PM-கிசான் திட்டத்தின் 17வது தவணையை விநியோகிக்க உள்ளார். இதன் மூலம், 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பலன்களைப் பெறுவார்கள். கிருஷி சாகிகளாகப் பயிற்சி பெற்ற 30,000க்கும் மேற்பட்ட சுயஉதவிக்குழுக்களுக்கு, துணை விரிவாக்கப் பணியாளர்களாகப் பணியாற்றும் சான்றிதழ்களையும் பிரதமர் மோடி இன்று வெளியிடுவார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்திபென் படேல், மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பல மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். பிரதமரின் வாரணாசி பயணம் சுமார் 4.5 மணி நேரம் நீடிக்கும் என தெரிகிறது.
2,76,665 விவசாயிகளுக்கு பயனளிக்கும் சம்மன் நிதியின் தவணை
இன்று மாலை 4 மணியளவில் பாபத்பூரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் மோடி தரையிறங்குகிறார். பின்னர் மாலை 5 மணியளவில் பிரதமர் கிசான் சம்மான் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது, காசியில் உள்ள 2,76,665 விவசாயிகள் பயன்பெறும் சம்மன் நிதியின் தவணையை பிரதமர் மோடி வெளியிடுவார். அதன் பிறகு, அவர் 21 விவசாயிகளை சந்தித்து அவர்களின் விளைபொருட்களை ஆய்வு செய்வார். இன்று இரவு 7 மணிக்கு, வாரணாசியின் தசாஸ்வமேத் காட்டில் கங்கா ஆரத்தியை காண உள்ள பிரதமர் மோடி, பின்னர் இரவு 8 மணிக்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்வார்.