Loading...
நல்கொண்டா பள்ளி முதல்வர் கொலையில் சிக்கிய 10-ஆம் வகுப்பு மாணவர்கள்: காவல்துறை துப்புதுலக்கியது எப்படி?
தெலங்கானா பள்ளியின் முதல்வர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவர்கள் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது

நல்கொண்டா பள்ளி முதல்வர் கொலையில் சிக்கிய 10-ஆம் வகுப்பு மாணவர்கள்: காவல்துறை துப்புதுலக்கியது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 20, 2026
12:56 pm

செய்தி முன்னோட்டம்

தெலங்கானா மாநிலத்தில் இயங்கி வரும் நாகார்ஜுனா கிராமர் கான்செப்ட் பள்ளியின் முதல்வர் கல்லு ரூபாரெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதே பள்ளியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. கொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது அத்தையிடம் மொபைலில் பேசிய ரூபாரெட்டி, உரையாடலின் முடிவில் "பாபு" என்ற வார்த்தையை கூறியிருந்தார். அந்த வார்த்தையே வழக்கில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. காவல்துறை நடத்திய விசாரணையில், முதல்வர் வழக்கமாக தனது மாணவர்களை "பாபு" என்றே அழைப்பார் என்பது தெரியவந்தது. இந்த வார்த்தையின் அடிப்படையில், பள்ளி மாணவர்கள் மீது காவல்துறைக்கு சந்தேகம் வலுத்தது.

கொலை திட்டம்

யூடியூப் பார்த்து தீட்டப்பட்ட கொடூரத் திட்டம்

முதல்வர் இருந்ததற்காக மூடப்பட்ட பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, இருநாட்கள் பள்ளிக்கு வராத இரு மாணவர்களைக் கண்காணித்து, சிசிடிவி காட்சி ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 16 வயதுடைய இரு மாணவர்களும் ஆடம்பரச் செலவுகளுக்கு அடிமையானவர்கள் ஆவர்.

கடந்த மாதம் விடுதியில் பணம் வைத்திருந்ததற்காக இவர்களைப் பெற்றோரின் முன்னிலையில் முதல்வர் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், இணையதளத்தில் குற்றங்களைச் செய்வது எவ்வாறு என்று தேடிப் பார்த்து, கத்தி மற்றும் கையுறைகளை வாங்கி வந்து முதல்வரைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளனர்.

நடவடிக்கை

பறிமுதல் மற்றும் காவல்துறை நடவடிக்கை

கொண்டமல்லப்பள்ளி காவல் நிலையத்தில் பிரிவு 103 BNS கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொலைக்குப் பிறகு அறையிலிருந்த ரூ.2.50 லட்சம் பணத்தைத் திருடிச் சென்ற அம்மாணவர்களிடமிருந்து, ரூ.1.54 லட்சம் ரொக்கம் (இரத்தக் கறை படிந்த ரூபாய் நோட்டுகள் உட்பட), கொல்லப்பட்டவரின் ஐபோன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, கையுறைகள் மற்றும் முகமூடிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொண்டமல்லப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த காவல் அதிகாரிகளுக்கு எஸ்பி பாராட்டுகளையும் வெகுமதிகளையும் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT