நாகூர் தர்க்காவின் 467வது கந்தூரி விழா - இன்று கொடியேற்றத்தோடு துவக்கம்
தமிழ்நாடு மாநிலம் நாகை மாவட்டம் நாகூரில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா. ஜாதி, மதம் பேதமின்றி இந்தியா முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள் மற்றுமின்றி அனைத்து சமுதாய மக்களும் இந்த தர்காவிற்கு வருகை தந்து நாகூர் ஆண்டவரை வழிபட்டு செல்வது வழக்கம். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தர்க்காவின் 467ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா இன்று(டிச.,14) இரவு அதிர்வேட்டுகள் முழக்கத்துடன் 5 மினராக்களில் ஒரேநேரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு அடுத்த 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது என்பதால் இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடக்கிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு
இதனையொட்டி இன்று பிற்பகல் 12 மணிக்கு நாகை மீரா பள்ளி வாசலில் இஸ்லாம் ஜமாத்தார்கள் முன்னிலையில் புனித கொடிகள் பெரிய கண்ணாடி அலங்கார ரதத்தில் வைக்கப்பட்டு வீதியுலா செல்ல புறப்பட்டது. இந்த ரதத்தினை தொடர்ந்து செட்டிப்பல்லக்கு, டீஸ்டா கப்பல், சாம்பிராணி சட்டி ரதம், போட் மெயில், சின்ன ரதம் உள்ளிட்ட ரதங்கள் வீதியில் உலா சென்று நாகூர் தர்கா அலங்கார வாசலுக்கு செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த திருவிழாவையொட்டி ஆயுதப்படை, ஊர்காவல் படை, உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட காவல்துறை என ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.