பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பரவிய தகவல் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதில்
இலங்கை விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு, நலமுடன் இருக்கிறார் என்னும் பரபரப்பான தகவலை, தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், பிரபாகரன் குறித்த உண்மை அறிவிப்பினை வெளியிட மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார். இவரின் கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இவருடைய கருத்துக்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், என் தம்பி சின்னவன் பாலச்சந்திரனை சாகக்கொடுத்துவிட்டு அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பித்திருப்பார் என்று நினைக்கிறீர்களா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொள்ளும் கோழையல்ல எங்கள் அண்ணன்-சீமான்
மேலும் பேசிய அவர், தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல எங்கள் அண்ணன் பிரபாகரன். போர் முடிந்து பேரழிவை சந்தித்த பிறகும், 15 ஆண்டுகளாக பிரபாகரன் ஒரே இடத்தில் பதுங்கியிருப்பார், எதுவும் பேசாமல் இருப்பார் என்று நினைக்கிறீர்களா? என்றும், சொல்லிவிட்டு வருபவர் அல்ல எங்கள் பிரபாகரன், வந்துவிட்டு சொல்லுவார் அதுதான் அவர் பழக்கம், அவரை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து, சொல்லுக்கு முன் செயல் என்று எங்களுக்கு கற்பித்த தலைவர் அவர். அதனால் தேவையில்லாமல் குழப்பம் வேண்டாம், பிரபாகரன் ஒரு நாள் மக்கள் முன் தோன்றுவார் என்று பழ.நெடுமாறன் கூறுகிறார். அவ்வாறு அவர் தோன்றும் போது பேசுவோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.