'என்னுடைய அரசியல் எதிரி சாதி தான்' - கமல்ஹாசன்
தமிழ் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் தனது நீலம் பண்பாட்டு மையத்தின் வாயிலாக பல சமுதாய பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஓர்பகுதியாக சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையம் ஒன்றினை அவர் அமைத்துள்ளார். இதன் திறப்புவிழா நேற்று(பிப்.,12) நடைபெற்ற நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இந்த புத்தகவிற்பனை நிலையத்தை துவக்கிவைத்துள்ளார். இதனைதொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் அவர்கள், 'உயிரே, உறவே, தமிழே வணக்கம். இதுதான் என் வாழ்க்கையின் உண்மை தத்துவம். இதனை காக்க வேண்டியது என் கடமை, தேவை' என கூறினார். தொடர்ந்துபேசிய அவர், அரசியல், கலாசாரம் என்பதை தனித்தனியாக வைத்திருக்கவேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம் என்று கூறினார்.
'ஜாதி என்பது கொடூரமான ஆயுதம். அதை அரசியலில் இருந்து நீக்க வேண்டும்'-கமல்
இதனையடுத்து, தன்னுடைய முக்கியமான அரசியல் எதிரி ஜாதி தான், 21வயதாக இருக்கும் போதிருந்து இதனை தாம் சொல்லி வருவதாகவும் தெரிவித்தார். ஜாதி என்பது கொடூரமான ஆயுதம். அதை அரசியலில் இருந்து நீக்கவேண்டும் என்பது அம்பேத்கர் வகுத்ததாகும். ஆனால் இது இன்றுவரை நிறைவேறவில்லை என்று கூறியுள்ளார். மேலும், இந்தத்தொடர் போராட்டத்தின் ஓர் நீட்சியாகத்தான் நீலம் பண்பாட்டு மையத்தை தாம் பார்ப்பதாகவும், மய்யம், நீலம் என்பதற்கு எழுத்தாக்கம் வேண்டுமானால் வேறாக இருக்கலாம், ஆனால் இரண்டின் அர்த்தம் ஒன்றுதான் என்று கூறினார். தன்னையும் அவர்களுள் ஒருவராக சேர்த்துக்கொண்டதில் பெருமை என்றும் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து பா.ரஞ்சித் பேசுகையில், கமலின் எழுத்துப்பாணியை பார்த்து தாம் வியப்பதாகவும், வியாபாரநோக்கில் மட்டுமல்லாமல் கலைஞனாக கலாச்சார இடைவெளியை சரியாக பயன்படுத்தியவர் கமல் என்றும் பேசினார்.