"மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும்": வீராங்கனை மீராபாய் சானு வேண்டுகோள்
ஒலிம்பிக் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, தனது சொந்த மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே நடந்து வரும் மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மே 3ஆம் தேதி முதல் மணிப்பூரின் மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே இன மோதல்கள் நடந்து வருகின்றன. இதுவரை நடந்த மோதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள், வன்முறைக்கு மத்தியில் பயிற்சி பெற முடியாமல் தவித்து வருகின்றனர் என்று தற்போது அமெரிக்காவில் பயிற்சி பெற்று வரும் மீராபாய் சானு கூறியுள்ளார்.
மணிப்பூர் மோதல் பல குழந்தைகளின் படிப்புக்கு இடையூறாக உள்ளது
"மணிப்பூரில் மோதல்கள் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அமைதி திரும்பவில்லை. இந்த மோதலால் பல வீரர்களால் பயிற்சி பெற முடியவில்லை. இது பல குழந்தைகளின் படிப்புக்கு இடையூறாக உள்ளது." என்று மீராபாய் சானு தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். "இந்த மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரவும், மணிப்பூர் மக்கள் அனைவரையும் காப்பாற்றவும், முன்பு நிலவிய அமைதியை மீட்டெடுக்கவும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, தொலைதூரத்தில் இருந்தாலும் வீட்டிலுள்ள நிலைமையைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.