'எனது காரும் சிக்னலில் நின்று செல்லும்' - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி மாநிலம் மிக சிறிய யூனியன் பிரதேசமாகும். இங்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் காரில் செல்லும் பொழுது முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்கள் நிறுத்திவைக்கப்பட்டு, அவர்கள் வாகனம் விரைந்து செல்லும் வகையில் காவல்துறை ஏற்பாடுகளை செய்வது வழக்கம். இதற்கிடையே வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் கணிசமாக அதிகரிக்கும். இதனால் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தொடர்ந்து சிக்னல்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் சுட்டெரிக்கும் வெயிலில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இந்நிலையில் நேற்று(மே.,21) முதல் அமைச்சர் ரங்கசாமி காரில் வருவதன் காரணத்தினால் சிக்னல்களை நிறுத்திய காவல்துறை அவரது காருக்கு மட்டும் செல்வதற்கு வழிவிட்டுள்ளனர்.
தான் வரும் தகவலை வாக்கி டாக்கி மூலம் தெரிவிக்க வேண்டாம் என்று உத்தரவு
அப்போது முதல்வர் ரங்கசாமி, மூன்று வழிகளிலும் மக்கள் கடும்வெயிலில் நின்று அவதிப்படுவதை கவனித்துள்ளார். அதன்பின்னர், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை அழைத்து பேசிய அவர், தனது கார் வருகையில் எந்த சிக்னலையும் நிறுத்தவேண்டாம் என்றும், தன்னால் பொதுமக்கள் [பாதிக்கப்பட கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும், மக்களோடு மக்களாக நின்று முறைப்படி சாலையை நான் கடந்து செல்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் தான் வரும் தகவலினை சிக்னலில் நிற்கும் காவலர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவலளித்து அவர்களை சிரமப்படுத்த வேண்டாம் என்றும் தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் படி, அவர் இன்று(மே.,22)காலை சட்டப்பேரவைக்கு சென்ற முதல்வர் ரங்கசாமியின் கார் அவர் கூறியவாறு அனைத்து சிக்னலிலும் மக்களோடு மக்களாக நின்று தான் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.