முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் 'தமிழ் வாழ்க' வடிவில் வாய்க்கால் வடிவமைப்பு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் பிரபலமானவை அலையாத்தி காடுகள் (mangrove forest). கிட்டத்தட்ட 50 ஹெக்டேர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள அலையாத்தி சதுப்புநில காடுகளில், 'தமிழ் வாழ்க' எனும் சொற்களின் வடிவில் தற்போது வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. 9 ஹெக்டேர் பரப்பில் 3 ஆயிரத்து 962 மீட்டர் நீளத்தில் இந்த வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய அலையாத்திக் காடுகள் அமையப்பெற்ற இடம் முத்துப்பேட்டை என்பது குறிப்பிடத்தக்கது. அலையாத்தி காடுகள் என்பது கடற்கரை ஓரங்களில் உள்ள சேறு கலந்த சதுப்பு நிலங்களிலும், உவர் நீரில் வளரக்கூடியது. பல்வேறு நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்தி இடமாகவும், கடற்கரையோர பகுதிகளுக்கு கடலரிப்பில் இருந்து இயற்கையான பாதுகாப்பு அரணாகவும் சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ளன.