சிவ்தாஸ் மீனா இடமாற்றம்; தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ்
தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்தவர் சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஷிவ்தாஸ் மீனா இடத்தில் நியமிக்கப்படவுள்ள அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான அரசாணைப்படி, தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முருகானந்தம் ஐஏஎஸ் இன்று தலைமை செயலகத்தில் முறைப்படி தனது பதவியை ஏற்றுக்கொண்டார். இவர் முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலினின் செயலராக பணியாற்றி வந்தார். 1991 பேட்ச் அதிகாரியும், சென்னையைச் சேர்ந்தவருமான முருகானந்தம் இதற்கு முன்பு நிதித்துறை செயலர், தொழில்துறை செயலர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.