ஜனவரி 18 வரை, மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மும்பையில், ஜனவரி 18ஆம் தேதி வரை 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மும்பை காவல்துறை நேற்று அறிவித்துள்ளது. கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, ட்ரோன்கள், ரிமோட் கண்ட்ரோல்டு மைக்ரோலைட் விமானங்கள், பாராகிளைடர்கள், பாரா மோட்டார்கள், ஹேண்ட் கிளைடர்கள் மற்றும் ஹாட் ஏர் பலூன்கள் நகரின் மீது பறக்க 30 நாட்களுக்கு தடை விதிக்கப்படும். எனினும் காவல்துறையினரால் வான்வழிக் கண்காணிப்பிற்காக அல்லது காவல்துறை துணை ஆணையர் (செயல்பாடுகள்) எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்ட அனுமதியின் கீழ் இதுபோன்ற பொருட்களை பறக்கவிடலாம் என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாடத்திற்காக முன்னெச்சரிக்கை
டிசம்பர் 20, 2023 முதல் ஜனவரி 18, 2024 வரை இந்த தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையின் அறிக்கைபடி, பயங்கரவாதிகள் மற்றும் தேசவிரோதிகள் தங்கள் தாக்குதல்களுக்காக ட்ரோன்கள், பாராகிளைடர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, விவிஐபிகளை குறிவைத்து பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை குறி வைத்து. அதனால் இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த திடீர் அறிவிப்பு பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.