தடுப்பூசி நிர்வாகத்தை எளிமையாக்கும் U-WIN டிஜிட்டல் தளத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி; ஜேபி நட்டா அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் மாதம் ஆன்லைன் தடுப்பூசி மேலாண்மை போர்ட்டலான U-WIN ஐ அறிமுகப்படுத்த உள்ளார் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) தெரிவித்தார். இது தற்போது சோதனை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறப்பு முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் மருந்துகளின் நிரந்தர டிஜிட்டல் பதிவை பராமரிக்க இந்த போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது என்று நட்டா கூறினார். மூன்றாவது மோடி அரசாங்கத்தின் முதல் 100 நாட்கள் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய நட்டா, விரிவாக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்ளடக்கும் என்றும் கூறினார்.
U-WIN திட்டம் குறித்த விவரங்கள்
U-WIN அல்லது யுனிவர்சல் இம்யூனைசேஷன் வெப் நெட்வொர்க், இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் நிர்வகிக்கப்படும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் தளமாகும். கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மிகவும் வெற்றிகரமான CoWIN போர்ட்டலை மாதிரியாகக் கொண்டு, U-WIN இந்தியாவின் உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தை பூர்த்தி செய்யும். தடுப்பூசி செயல்முறையை எளிதாக்குவது, அணுகலை மேம்படுத்துவது மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் குடிமக்களுக்கும் இடையில் தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்வதே குறிக்கோளாகும். இது தவிர, மருத்துவர்களுக்கான தேசிய பதிவேடு, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான தரச் சான்றிதழ் மற்றும் நாடு முழுவதும் உள்ள சிறந்த 50 மருத்துவமனைகளுக்கு அவசரகால மற்றும் பேரிடர் சமயங்களில் பயன்படுத்தும் நடமாடும் மருத்துவமனைகளை வழங்க உள்ளதாகவும் நட்டா தெரிவித்தார்.