Loading...
கொளத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

கொளத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 24, 2026
02:48 pm

செய்தி முன்னோட்டம்

2026 சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகக்கூறி, தேர்தல் முடிவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். வாக்கு எண்ணிக்கையின் போது சில வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, ஸ்டாலின் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடுகளை சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் இந்த சரிபார்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன.

மனு தாக்கல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் அவர், கொளத்தூர் தொகுதியில் உள்ள 6 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை VVPAT ஒப்புகைச்சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில் முறைகேடுகள் நடந்துள்ளது வெளிப்பட்டுள்ளது எனவும், பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

தொகுதியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவிகளையும் முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்றும், கொளத்தூர் தொகுதியில் தாம் வெற்றி பெற்றதாக நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் அவர் மனுவில் கூறியுள்ளார்.

ADVERTISEMENT