
பழைய எதிரி புதிய எதிரி; எந்த கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது என முதல்வர் ஸ்டாலின் சூளுரை
செய்தி முன்னோட்டம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரில் நடைபெற உள்ளது. கட்சியின் முன்னோடிகளான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாட்களையும், திமுக தொடங்கப்பட்ட நாளையும் நினைவுகூரும் வகையில் நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு, திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த விழாவைக் கட்சித் தொண்டர்கள் கொள்கைப் பட்டாளமாக இருந்து பங்கேற்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். "கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக. நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து இலட்சிய வீரர்களாகப் புறப்படுவோம்" என்று அவர் கூறினார்.
விருதுகள்
முப்பெரும் விழாவில் விழாவில் வழங்கப்படும் விருதுகள்
பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொடக்கூட முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்தார். இதற்கிடையே, இந்த விழாவில் பல்வேறு மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. கனிமொழி கருணாநிதிக்கு பெரியார் விருதும், சுப. சீதாராமனுக்கு அண்ணா விருதும், சோ.மா.இராமச்சந்திரனுக்கு கலைஞர் விருதும், மருதூர் இராமலிங்கத்துக்கு பேராசிரியர் விருதும் வழங்கப்படும். முரசொலி அறக்கட்டளை சார்பில், பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு முரசொலி செல்வம் விருது வழங்கப்படும். இந்த விழா, 2026 ஆம் ஆண்டுத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான முன்னோட்டமாக அமையும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.