கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம்
செய்தி முன்னோட்டம்
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் கனகபுரம் தாலுகாவில் கடுசிவனஹல்லி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மல்லேஷ், இவருக்கு வயது 51.
இவரது தோட்டத்தில் இஸ்லாமியர்களான அமீனுல்லாஹ்'வும் அவரது மனைவியும் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு 15 வயதில் சாதிக் என்கிற மகனும், 7 வயதில் சாமாபின் என்கிற மகனும் உள்ளனர்.
சம்பவ தினத்தன்று வழக்கம் போல் அமீனுல்லாஹ்'வும் அவரது மனைவியும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர், அவர்கள் அருகில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் இருவரும், திடிரென்று மல்லேஷிற்கு சொந்தமான அவரது பண்ணை வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு சுவரில் தொங்க விடப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை இருவரும் எடுத்து விளையாடி கொண்டிருந்திருக்கிறார்கள்.
ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சிறுவன்
நிஜ துப்பாக்கி என்று தெரியாமல் ட்ரிக்கரை அழுத்திய சகோதரன்
அந்நிலையில், அது நிஜ துப்பாக்கி என்று அறியாத சாதிக் எதிர்பாரா விதமாக துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்தியுள்ளார்.
அதிலிருந்து வெளியேறிய குண்டு சாமாபின் மீது பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே அச்சிறுவன் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தான்.
துப்பாக்கி சத்தத்தை கேட்டு ஓடி வந்த பெற்றோர் சாமாபின் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதனர்.
இதனையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சாமாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு முறைகள் எதையும் முறையாக கையாளாமல் வீட்டில் துப்பாக்கியை வைத்திருந்த மல்லேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்போது அவரை கைது செய்து விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.