Airsewa போர்ட்டலில் AI தொழில்நுட்பம்: 90 நாட்களில் புதிய வசதி அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
விமான பயணிகளின் புகார்களுக்கு மிக வேகமாகவும், துல்லியமாகவும் தீர்வு காண்பதை உறுதி செய்யும் நோக்கில், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ AirSewa போர்ட்டலை மேம்படுத்தி, அதில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் புகுத்துவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ கடந்த ஆண்டு எதிர்கொண்ட கடுமையான விமான சேவை முடக்கங்களை தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 'பயணிகள் உதவி கட்டுப்பாட்டு அறை' என்ற புதிய மத்தியமயமாக்கப்பட்ட தளம் உருவாக்கப்பட்டது. இத்துறையின் அடுத்தகட்ட நகர்வு குறித்துப் சிவில் விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் விவரித்துள்ளார்.
புகார் கையாளுதல்
புகார் கையாளும் அமைப்பை உருவாக்கும் அமைச்சகம்
"விமானப் பயணிகளின் புகார்களைக் கையாளுவதற்கு மிகவும் வலுவான மற்றும் தடையற்ற ஒரு புதிய தளத்தை உருவாக்க அமைச்சகம் பணியாற்றி வருகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட புதிய அமைப்பு அடுத்த 90 முதல் 100 நாட்களுக்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும். இதன் ஒரு பகுதியாக, ஏர்சேவா போர்ட்டலின் முற்றிலும் புதிய பதிப்பு அறிமுகப்படுத்தப்படும். "இன்று தனித்தனிப் பிரிவுகளாக வேலை செய்யவில்லை; PACR என்பது ஒரே தளமாகச் செயல்படுகிறது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் என்பது நுகர்வோரை நேரடியாக எதிர்கொள்ளும் ஒரு அமைச்சகமாகும். புகார்களை மிக நேர்மையான, வேகமான முறையில் எவ்வாறு தீர்ப்பது என்பதை நோக்கியே எங்கள் பயணம் அமைந்துள்ளது" என விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் சமீர் குமார் சின்ஹா கூறினார்.
கட்டுப்பாட்டு அறை
PACR கட்டுப்பாட்டு அறையின் சாதனை
மத்திய அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த டிசம்பர் 10, 2025 முதல் தற்போது வரை, இந்த PACR கட்டுப்பாட்டு அறை 73,000-க்கும் மேற்பட்ட பயணிகளின் புகார்களை கையாண்டு, அதில் 98 சதவீதப் புகார்களுக்கு வெற்றிகரமாகத் தீர்வு கண்டுள்ளது. இது தற்போது பயணிகள் குறைதீர்ப்பிற்கான ஒரு நிரந்தர அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தளம் தற்போது தினசரி சராசரியாக 300 முதல் 400 புகார்களைப் பெற்று வருகிறது. சமீபத்திய மத்திய கிழக்கு பதற்றத்தின் காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்ட போது, இந்த கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தினசரி புகார்களின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
புகார்
புகார்களைப் பதிவு செய்வது எப்படி?
பயணிகள் தங்களின் புகார்களை சமூக ஊடகங்கள், மின்னஞ்சல், ஏர்சேவா போர்ட்டல் மட்டுமன்றி, PACR அமைப்பின் பிரத்யேக உதவி எண்களைத் தொடர்பு கொண்டும் பதிவு செய்யலாம்: 011-24604283, 011-2463298 உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தைகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. நடப்பாண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டுமே, இந்தியாவின் உள்நாட்டு விமான நிறுவனங்கள் மூலமாக 5.75 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ளது இத்துறையின் அசுர வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது.