திமுக இளைஞரணி மாநாடு - இருசக்கர வாகன பேரணியை துவங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி
திமுக கட்சியின் இளைஞரணி மாநாடு சேலம் மாவட்டத்தில் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்த தேவையான ஏற்பாடுகளை திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக செய்து வருகிறார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டினை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று(நவ.,15) இருசக்கர வாகன பிரச்சார பேரணி துவக்க விழா நடைபெற்றது.
13 நாட்கள் நடக்கவுள்ள இருசக்கர வாகன பேரணி
அதன்படி இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். பின்னர் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனம் ஓட்டி இந்த வாகன பிரச்சார பேரணியினை துவக்கி வைத்தார். இந்த இருசக்கர வாகன பேரணியில் மொத்தம் 188 இருசக்கர வாகனங்கள் பங்கேற்கிறது என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த பேரணியானது தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று, மொத்தம் 13 நாட்களில் 8,647 கி.மீ., தூரம் நடக்கவுள்ளது. இறுதியாக இந்த பேரணி வரும் 27ம் தேதி சேலம் மாவட்டத்தில் நிறுவைடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.