நில அபகரிப்பு வழக்கில் கைதான அமைச்சர் பொன்முடி விடுதலை
தமிழ்நாடு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக 1996ம்ஆண்டு முதல் 2001ம்ஆண்டு வரை செயல்பட்டு வந்தவர் பொன்முடி. அப்பொழுது அவர் போலி ஆவணங்கள் கொண்டு, 3,630 சதுரடியில், சைதாப்பேட்டையில் உள்ள அரசு நிலத்தினை அபகரித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இந்த புகாரின்படி அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003ம்ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதே நீதிமன்றத்தில் கடந்த 2007ம்ஆண்டு, அமைச்சர் பொன்முடி தன்னை விடுவிக்குமாறு கோரி மனுதாக்கல் செய்தார். அதனையேற்ற நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தது என்று தெரிகிறது. இதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மீண்டும் அமைச்சர் பொன்முடி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவுச்செய்யப்பட்டது.
90க்கும் மேற்பட்ட சாட்சியங்களை கொண்டு நீதிமன்றத்தில் விசாரணை
அதில், அமைச்சர் பொன்முடி போலி ஆவணங்களை வைத்து மோசடி செய்ததற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதால், இந்த வழக்கினை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அதன்படி 2017ம் ஆண்டு இவ்வழக்கினை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, இது குறித்து 90க்கும் மேற்பட்ட சாட்சியங்களை கொண்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், இதற்கான தீர்ப்பினை நீதிமன்றம் இன்று(ஜூலை.,6) வழங்கியுள்ளது. நீதிபதி வழங்கிய தீர்ப்பில், "இந்த வழக்கில் அமைச்சர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை லஞ்ச ஒழிப்புத்துறை போதிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. இதனால் அந்த 10 பேரினையும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.