Page Loader
மும்பை BMW விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான அரசியல்வாதியின் மகன் மிஹிர் ஷா கைது 

மும்பை BMW விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான அரசியல்வாதியின் மகன் மிஹிர் ஷா கைது 

எழுதியவர் Sindhuja SM
Jul 09, 2024
05:28 pm

செய்தி முன்னோட்டம்

மும்பை BMW விபத்து வழக்கின் முக்கிய குற்றவாளியான மிஹிர் ஷா இன்று கைது செய்யப்பட்டார். மும்பையின் வோர்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு பைக்கை BMW கார் மோதியதால் ஒரு பெண் உயிரிழநதார். இந்த காரை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் தலைவர் ஒருவரின் மகன் மிஹிர் ஷா ஓட்டியதாக கூறப்படுகிறது. அவர் குடிபோதையில் காரை ஓட்டி சென்று ஒரு பைக்கின் மீது மோதியதில், அதில் இருந்த ஒரு பெண் உயிரிழந்தார். இந்நிலையில், விபத்து நடந்த அன்றே மிஹிர் ஷா தலைமறைவாகிவிட்டார். அவரது தந்தையும் அரசியல் தலைவருமான ராஜேஷ் ஷாவை போலீசார் ஏற்கனெவே கைது செய்துவிட்டனர்.

இந்தியா 

1.5 கி.மீ வரை இழுத்து செல்லப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்த பெண் 

மீனவர்களான காவேரி நக்வாவும் அவரது கணவர் பிரதீக் நக்வாவும் சசூன் டாக்கில் மீன்களை வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றனர். அப்போது, மிஹிர் ஷா ஓட்டிச் சென்ற BMW கார் அவர்கள் சென்ற ஸ்கூட்டியை மோதிவிட்டு நிற்காமல் வேகமாகச் சென்றுவிட்டது. அந்த விபத்தின் போது காரில் சிக்கிய காவேரி நக்வாவை 1.5 கி.மீ வரை மிஹிர் ஷாவின் கார் இழுத்து சென்றதற்கான ஆதரங்களும் கிடைத்துள்ளன. 1.5 கி.மீ வரை இழுத்து செல்லப்பட்ட காவேரி நக்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். பின்னர் மிஹிர் ஷாவின் கார் பாந்த்ரா கிழக்கில் உள்ள கலா நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் நடந்த போது, மிஹிர் ஷாவின் டிரைவரும் அவரோடு தான் இருந்தார்.

இந்தியா 

டிரைவர் மீது பழியை போட சொன்ன அரசியல் தலைவர் ராஜேஷ் ஷா

இந்நிலையில், விபத்து நடந்ததை உணர்ந்ததும் மிஹிர் ஷா தனது தந்தைக்கு அழைத்து விவரத்தை சொல்லி இருக்கிறார். அவரது தந்தையான ராஜேஷ் ஷா, உடனடியாக டிரைவரிடம் காரை கொடுத்துவிட சொல்லி மிஹிர் ஷாவிடம் கூறி இருக்கிறார். ஆனால், 1.5 கி.மீ வரை மிஹிர் ஷாவின் கார் நிற்காமல் சென்றதும், அதன் பிறகு டிரைவரிடம் மிஹிர் ஷா தனது காரை கொடுத்ததும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகிவிட்டது. இதனையடுத்து, மிஹிர் ஷா மீது பிரிவுகள் 105(கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை), 281(கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது), 125-பி(உயிர் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துதல்), 238, 324(4), வாகனச் சட்டம் 184, 134ஏ, 134பி, 187 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.