மிக்ஜாம் புயல் நிவாரணம்: தனது ஒருமாத சம்பளத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
அண்மையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது. மழை ஓய்ந்த நிலையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில், 'சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2ம்.,தேதி முதல் 4ம்.,தேதி வரை மிக கனமழை பெய்தது. இது 47 ஆண்டுக்கால வரலாற்றில் பெய்திடாத பெருமழை. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருகோடிக்கும் மேலான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளார். மழைநீர் வடிகால்களில் திட்டமிட்டு முன்னதாக மேற்கொண்ட பணிகள் மற்றும் அனைத்து துறையினரும் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்ததால் பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிதி ஆதாரம் திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
இதற்கிடையே பாதிப்படைந்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த பேரிடர் மீட்பு பணிகளுக்கு பல நல்ல உள்ளங்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளித்துள்ளனர். அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் முதல்வர் கூறியுள்ளார். மேலும் இந்த மீட்பு பணிகளுக்கு நிதிகளை திரட்ட வேண்டிய நிலை உள்ளது என்று கூறியுள்ள அவர், அரசின் முயற்சிகளுக்கு அனைத்து பிரிவினரும் தங்களால் இயன்ற உதவியினை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதன் ஆரம்பமாக தனது ஒரு மாத சம்பளத்தினை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ள முதல்வர், நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும், தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தினை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.