'5 நிமிடத்திற்கு மேல் பேச அனுமதிக்கவில்லை': நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென கலந்து கொண்டார். அனைத்து மாநிலங்களும் தங்கள் கவலைகள் மற்றும் பிரச்சனைகளை முன்வைக்கும் வாய்ப்பை பெறும் இந்த ஒன்பதாவது ஆட்சிமன்றக் குழு கூட்டத்தை புறக்கணிக்க பல எதிர்க்கட்சி முதல்வர்கள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று, மேற்கு வங்காளத்திற்கு அரசியல் பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கூட்டத்தில் நிதி ஆயோக் கலந்து கொள்வதாக மம்தா பானர்ஜி கூறினார். "பட்ஜெட் கூட்டுறவு கூட்டாட்சித் தன்மையைக் காட்டுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்... ஆனால் அது பாகுபாட்டை மட்டுமே காட்டுகிறது" என்று அவர் கூறினார்.
கூட்டத்தை புறக்கணித்த எதிர்க்கட்சி முதல்வர்கள்
இந்நிலையில், அந்த கூட்டத்தில் இன்று கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, 5 நிமிடத்திற்கு மேல் தன்னை பேச அனுமதிக்கவில்லை என்றும், தனது மைக்கை அணைத்துவிட்டார்கள் என்றும் கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். "நான் பேசிக்கொண்டிருந்தேன், எனது மைக் நிறுத்தப்பட்டது...எனக்கு முன்பிருந்தவர்கள் 10-20 நிமிடங்கள் பேசினர். நான் மட்டுமே எதிர்கட்சியில் இருந்து பங்கேற்றேன். எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இது அவமானகரமானது" என்று பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார். பானர்ஜியின் கூற்றுக்களை மத்திய அரசு வட்டாரங்கள் மறுத்துள்ளன. தமிழகத்தின் மு.க.ஸ்டாலின், கேரளாவின் பினராயி விஜயன், பஞ்சாபின் பகவந்த் மான், கர்நாடகாவின் சித்தராமையா, ஹிமாச்சலப் பிரதேசத்தின் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் தெலுங்கானாவின் ரேவந்த் ரெட்டி உட்பட பல எதிர்க்கட்சி முதல்வர்கள் இந்த கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.