நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் "ஆக்கிரமிப்புகளை அகற்றும்" பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இன்று(பிப் 8) நாடாளுமன்றத்துக்கு பேரணியாகச் சென்றார். அந்த பேரணியை தடுத்து நிறுத்திய போலீஸார் அவரை கைது செய்தனர். ஏராளமான கட்சித் தொண்டர்களுடன், ரயில்வே பவனில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பேரணியாக செல்ல முப்தி திட்டமிட்டிருந்தார். அங்கு ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் "புல்டோசர் கொள்கை" பற்றி எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க அவர் விரும்பினார். முப்தியைப் போலீஸார் கைது செய்து, அவரையும் அவரது கட்சித் தொண்டர்களையும் ஜந்தர் மந்தருக்கு அழைத்துச் சென்றனர். ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் கலைந்தனர்.
"புல்டோசர் கொள்கை" என்று எதை குறிப்பிடப்படுகிறார்?
ஜம்மு காஷ்மீரில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என்று கூறப்படும் கட்டிடங்களை புல்டோசர் வைத்து அரசு அண்மையில் இடித்தது. அரசு நிலங்களை மீட்பதற்காக 20 மாவட்டங்களில் இந்த இடிப்பு பணி நடைபெற்று வந்தது. இதனால் பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இதை எதிர்த்து பலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ரோஷினி சட்டம் சட்டம் 2007இல் ஜம்மு காஷ்மீரில் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின் படி அரசாங்க நிலங்களை யார் ஆக்கிரமித்திருந்தாலும் அவர்களுக்கே அந்த நிலம் சொந்தம் என்று கருதப்படும். ஆனால், 2020இல் இந்த சட்டத்தை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தற்போது "அரசுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்கான" நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவே இந்த எதிர்ப்பு மற்றும் போராட்டத்திற்கான காரணமாகும்.