எதிர்க்கட்சி கூட்டம் - திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் கார்கே
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை பாஜக'விற்கு எதிராக ஓரணியாக திரட்டும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் பாட்னாவில் கடந்த ஜூன்.,23ம் தேதி தேசியளவிலான எதிர்க்கட்சி கூட்டத்தினை நடத்தினார். இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இவரின் அழைப்பினை ஏற்று 16 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இதன் முடிவில் விரைவில் மற்றொரு எதிர்க்கட்சி கூட்டம் நடைபெறும் என்று பீகார் முதல்வர் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த எதிர்க்கட்சி கூட்டமானது வரும் ஜூலை 17, 18ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமாவளவனுக்கு அழைப்பு கடிதம் எழுதிய காங்கிரஸ் கட்சி தலைவர்
இந்நிலையில், நடக்கவுள்ள இந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்.,திருமாவளவன் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்.,மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதுக்குறித்து திருமாவளவனுக்கு கார்கே எழுதியுள்ள அழைப்பு கடிதத்தில், "தொல்.திருமாவளவன் அவர்களே கர்நாடகா மாநிலமான பெங்களூரில் வரும் ஜூலை 17ம்தேதி மாலை 6 மணியளவில் துவங்கி ஜூலை 18ம் தேதி காலை 11 மணி வரை நடக்கவுள்ள எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களை பெங்களூரில் சந்திக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இவரது அழைப்பினை ஏற்று அவர் நடக்கவுள்ள எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த கூட்டம் ஜூலை 13, 14 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நிலையில் தற்போது தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.