மருத்துவ படிப்புகள் தமிழில் இருக்க வேண்டும்-நிர்மலா சீதாராமன் பேச்சு
இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கையை கொண்டுவரும் படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் பல மாநிலங்களில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் பாட புத்தகங்கள் ஆங்கிலத்தில் உள்ளதால், தமிழில் பள்ளிக்கல்வி முடித்த மாணவர்களுக்கு அதனை புரிந்துக்கொள்ள மிக கஷ்டமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மருத்துவம் மற்றும் பொறியியல் பாடப்புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. அதே போல்,மத்திய பிரதேச மாநிலத்தில் 3 மருத்துவ படிப்பிற்கான பாடப்புத்தகங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களது உயர்கல்வியை தாய் மொழியில் கற்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை தற்போது பல மாநிலங்களில் எடுக்கப்பட்டு வருகிறது.
பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் 35வது பட்டமளிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதன் பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில், "தமிழில் கற்றால் புரிதல் ஆழமாக இருக்கும். அதே போல், தமிழில் கற்றால் எளிதில் புரிந்து கொள்ளலாம்" என்றும், "மருத்துவ கல்வியுடன் தொடர்புள்ள அனைத்து படிப்புகளும் தமிழ் மொழியில் இருக்க வேண்டும். தாய் மொழியில் பலமாக இருந்தால், மற்ற எந்த மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.