இந்தியாவின் ராஜதந்திர வெற்றி: ஈரானின் தடையை மீறி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த இந்தியக் கப்பல்கள்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு போர் காரணமாக உலகளவில் எரிசக்தி விநியோகம் முடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் 'சிவாலிக்' மற்றும் 'நந்தா தேவி' ஆகிய இரண்டு எல்பிஜி எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. 'தி ஃபைனான்சியல் டைம்ஸ்' இதழுக்கு அளித்த நேர்காணலில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்,"ஈரானுடன் இந்தியா மேற்கொண்டு வரும் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நல்ல பலனைத் தரத் தொடங்கியுள்ளன. பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப் பேச்சுவார்த்தையும் ஒருங்கிணைப்பும் மட்டுமே சிறந்த வழி என்பதை இது நிரூபிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஈரான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் இந்தியா கப்பல்களுக்கு அனுமதி கிடைத்திருப்பது அதன் ராஜதந்திர கொள்கைகளுக்கான வெற்றியாக பார்க்கப்படுகிறது.
முக்கியத் தகவல்கள்
ஹார்முஸ் நீரிணையை கடக்கும் இரண்டு கப்பல்கள் பற்றிய விவரங்கள்
இந்த இரண்டு கப்பல்களும் சுமார் 92,712 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு வருகின்றன. சிவாலிக் கப்பல் இன்று (மார்ச் 16) முந்த்ரா துறைமுகத்தையும், நந்தா தேவி கப்பல் நாளை (மார்ச் 17) கண்ட்லா துறைமுகத்தையும் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியக் கப்பல்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக இந்தியா எந்த கைமாறும் செய்யவில்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவே இதற்கு காரணம் என்றும் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தியுள்ளார். சுமார் 22 இந்தியக் கப்பல்கள் இன்னும் அந்தப் பகுதியில் சிக்கியுள்ள நிலையில், அவற்றை மீட்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.