பாகிஸ்தானில் நடைபெறும் கொலையில் இந்தியாவிற்கு சம்மந்தம் இல்லை: வெளியுறவுத்துறை மறுப்பு
பாகிஸ்தான் மண்ணில், இந்திய ஏஜெண்டுகள் இலக்கு வைத்து படுகொலைகளை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியினை மறுத்துள்ள வெளியுறவு அமைச்சகம், அவற்றை "தவறான மற்றும் தீங்கிழைக்கும் இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரம்" என்று கூறியுள்ளது. வெளிநாட்டு மண்ணில் வாழும் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் இந்த நடவடிக்கை இருப்பதாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள உளவுத்துறை செயல்பாட்டாளர்களை மேற்கோள் காட்டி தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் முந்தைய அறிக்கையையும் அமைச்சகம் அடிக்கோடிட்டுக் காட்டியது. அதில் அவர் மற்ற நாடுகளில் குறிவைக்கப்பட்ட கொலைகள் "இந்திய அரசாங்கத்தின் கொள்கை அல்ல" என்று கூறியுள்ளார்.
தி கார்டியன் அறிக்கை என்ன கூறுகிறது?
2019ஆம் ஆண்டு ஜம்முவில் நடந்த புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில், 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டபிறகு, தேசிய பாதுகாப்பிற்கான அணுகுமுறையின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு மண்ணில் இதுபோன்ற 20 இலக்கு கொலைகளை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான RAW நடத்தியதாக சில பாகிஸ்தான் புலனாய்வாளர்கள் பகிர்ந்துள்ளதை ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பின்னர் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. ஆனால், 2023ஆம் ஆண்டு முதல், குறிவைக்கப்பட்ட படுகொலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. பாகிஸ்தானின் உளவுத்துறையின் ஆதாரங்கள், சுமார் 15 பேரின் சந்தேக மரணங்களில் இந்தியா சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டுகிறது. அவர்களில் பெரும்பாலோர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் நெருங்கிய தூரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அறிக்கை கூறுகிறது.
பாகிஸ்தான் கூறுவது என்ன?
பாகிஸ்தான் புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த மரணங்கள் பெரும்பாலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து செயல்படும் இந்திய உளவுத்துறை ஸ்லீப்பர் செல்களால் திட்டமிடப்பட்டது. ஜூன் 18, 2023 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசாங்கத்தின் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டி, கனடாவின் சமீபத்திய கூற்றுகளால் இந்த அறிக்கை ஆதரிக்கப்பட்டது. இந்திய உளவுத்துறை செயலாளரை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு மண்ணில் நீதிக்கு புறம்பான கொலைகளுடன் தொடர்புடைய இஸ்ரேலின் மொசாட் மற்றும் ரஷ்யாவின் கேஜிபி போன்ற புலனாய்வு அமைப்புகளிலிருந்து இந்தியா உத்வேகம் பெற்றுள்ளதாகவும் அறிக்கை கூறியுள்ளது. 2018ஆம் ஆண்டு சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதை RAW அதிகாரிகள் மேற்கோள் காட்டியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.