மக்கள்தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்கள் வழங்க முடிவு: தேசிய மருத்துவ ஆணையம்
செய்தி முன்னோட்டம்
மக்கள்தொகை அடிப்படையில், எம்பிபிஎஸ் மருத்துவ கல்விக்கான இடங்களை வழங்க தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான இடத்தினை அதிகரிக்க வேண்டுமென்றாலும், புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்ட வேண்டும் என்றாலும் அதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதிப்பெற வேண்டும்.
இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
இதனிடையே, எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் ஓர் புதிய நடைமுறையினை கொண்டு வந்தது.
அது என்னவென்றால், அதிகபட்சமாக 150 மருத்துவ படிப்பிற்கான இடங்களையே மருத்துவ கல்லூரிகளுக்கு வழங்கப்படும்.
மீதமுள்ள இடங்கள் 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் என ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டது.
மருத்துவ படிப்பு
2025-2026ம் கல்வியாண்டு முதல் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என தகவல்
இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், புதிய மருத்துவ கல்லூரிகளை கட்ட அனுமதிக்க வேண்டும் என்னும் கோரிக்கை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் எழுந்தது.
மேலும் இந்த புது நடைமுறை குறித்து மறு ஆய்வு மேற்கொள்ளும்படி மத்திய அரசுக்கு சுகாதாரத் துறை சார்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவ கல்வி வாரிய தலைவரான அருணா வானிக்கர் அறிக்கை ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "வரும் 2025-2026ம் கல்வியாண்டு முதல் மக்கள் தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான இடங்களை வழங்குவதற்கான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.