முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மன்மோகன் சிங் ஏற்கனவே சமீப காலங்களில் உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. 92 வயதான மன்மோகன் சிங், தற்போதைய பாகிஸ்தானின் ஒரு பகுதியில் 1932இல் பிறந்தார். இந்தியாவின் சோசலிச காலக் கொள்கைகளின் பிடியை உடைத்த நரசிம்ம ராவ் தலைமையிலான அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் முக்கிய சிற்பி என்று புகழப்படுகிறார்.
எம்பி அனைத்து பதவிகளில் இருந்தும் ஓய்வு
2014இல் காங்கிரஸ் தோல்வியடைந்தாலும், எம்பி பதவியில் நீடித்து வந்த மன்மோகன் சிங், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்த தனது ராஜ்யசபா எம்பி பதவிக்கு பிறகு எந்த பதவியையும் ஏற்கவில்லை. மல்லிகார்ஜுன் கார்கே, மன்மோகன் சிங்கின் பங்களிப்புகளை பாராட்டி, நவீன இந்தியாவின் பொருளாதார நிலப்பரப்பை வடிவமைப்பதில் அவரது முக்கிய பங்கை கோடிட்டுக் காட்டினார். 1991-1996 வரையிலான பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்தார். சோசலிச காலக் கொள்கைகளிலிருந்து இந்தியாவை தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி வழிநடத்தினார். 1991 முதல் ராஜ்யசபா உறுப்பினரான டாக்டர் சிங், 2004இல் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு 1998 முதல் 2004 வரை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார்.