மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்
மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஜூலை 19ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது ஒரு புதிய மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். மே 4ஆம் தேதி நடந்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் FIR தொடர்பாக தனித்தனி விண்ணப்பத்தை அவர்கள் தாக்கல் செய்துள்ளனர். மேலும், அவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிபிஐ முறையாக இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு FIR பதிவு செய்துள்ளது
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஒரு அமர்வு இன்று(ஜூலை 31) இந்த விவகாரம் தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் பதிலை ஆய்வு செய்ய உள்ள நிலையில், இந்த புதிய மனுக்கள் தக்கல் செய்யப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற வழக்கின் விசாரணை மத்திய புலனாய்வுத் துறைக்கு(சிபிஐ) மாற்றப்பட்டுள்ளதாக கடந்த வாரம் உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன் பிறகு, சிபிஐ முறையாக இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு FIR பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை மணிப்பூருக்கு வெளியே நடத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் தனது பிரமாணப் பத்திரத்தில் கோரி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.