மணிப்பூர் - புரட்சியின் குரல் என்னும் பெயரில் குகி பழங்குடியினரின் புதிய செய்தித்தாள்
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் போராட்டம் துவங்கியது. இந்த போராட்டமானது பெரும் கலவரமாக வெடித்து, கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே குகி பழங்குடியினத்தினை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, கலவரக்காரர்களால் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட கொடூரம் அங்கு நிகழ்ந்த நிலையில், அதன் வீடியோ பதிவுகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அங்கு இணைய சேவை கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. பல தரப்புகளின் கோரிக்கைகளுக்கு பின்னர் 2 தினங்களுக்கு முன்னர் அம்மாநில அரசு பகுதியளவு இணைய சேவைக்கு அனுமதி வழங்கியது என்று கூறப்படுகிறது.
குகி பழங்குடியினத்தினை சேர்ந்த தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்ட செய்தித்தாள்
அதன்படி, Broadband என்னும் தரை வழி இணைய சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாம். மொபைல் போன்களில் இந்த இணைய சேவை தடையானது தொடருகிறது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது மலை பகுதிகளில் பெருமளவில் வாழும் குகி இன பழங்குடியினர், மணிப்பூரில் நடக்கும் விவகாரங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், தகவல் பரிமாற்றத்திற்காகவும் சொந்தமாக ஒரு செய்தித்தாளினை துவங்கியுள்ளனர். 'சலேன் அவ்கின்' (புரட்சி குரல்) என்னும் பெயர் கொண்ட இந்த செய்தித்தாள் முழுக்க முழுக்க குகி பழங்குடியினத்தினை சேர்ந்த தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டதாகும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தித்தாள் அந்த பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றடைய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.