Page Loader
FASTag-ல் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10.. நீதிமன்றத்தின் மூலம் ரூ.8,000 இழப்பீடு!
பாஸ்டேக் மூலம் கூடுதல் கட்டணம், NHAI மீது வழக்கு தொடர்ந்த நபர்

FASTag-ல் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10.. நீதிமன்றத்தின் மூலம் ரூ.8,000 இழப்பீடு!

எழுதியவர் Prasanna Venkatesh
May 09, 2023
04:44 pm

செய்தி முன்னோட்டம்

பாஸ்டேக் மூலம் கூடுதலாக ரூ.10-ஐ பிடித்தம் செய்ததாகக் கூறி நீதிமன்றத்தில் NHAI-யின் மீது வழக்கு தொடர்ந்து ரூ.8,000 இழப்பீடு பெற்றிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர். 2020-ம் ஆண்டு பெங்களூரு காந்திநகரைச் சேர்ந்த 38 வயதான சந்தோஷ்குமார் என்பவர் சித்ரதுர்கா எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் இருமுறை பயணிக்க நேர்ந்திருக்கிறது. இரண்டு முறையும் அங்கிருந்து டோல் கேட்டைக் கடக்கும் போது, ரூ.35-க்குப் பதிலாக ரூ.40 அவருடைய பாஸ்டேக் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது. கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.5-க்கான காரணம் கேட்டு, யாரும் அவருக்கான சரியான விளக்கத்தை அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து NHAI அமைப்பு, அந்தக் குறிப்பிட்ட நெடுஞ்சாலையின் திட்ட இயக்குநர் மற்றும் ஜாஸ் டோல் ரோடு நிறுவனத்தின் மேலாளர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

பெங்களூரு

நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு: 

NHAI அமைப்பில் இருந்து யாரும் இந்த வழக்கு குறித்து ஆஜராகாத நிலையில், ஜாஸ் நிறுவனத்தின் சார்பில் தங்கள் தரப்பு வாதத்தை நீண்ட நாட்களுக்குப் பின்னர் சமர்ப்பித்திருக்கின்றனர். திட்ட இயக்குநரின் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகி பாஸ்டேக் அமைப்பு NPCI-யுடைது அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று வாதிட்டிருக்கிறார். மேலும், கார்களுக்கான டோல் கட்டணம் ரூ.38 என்றும், அதனை முழுமையாக்கி ரூ.40 வசூலிக்கப்பட்டதாகவும், இதில் எந்தத் தவறும் நடைபெறவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், தீர்ப்பு சந்தோஷ் குமாருக்கு சாதகமாக வந்திருக்கிறது. அவரிடம் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10-உடன் இழப்பீடாக ரூ.8,000 வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.